கம்பத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கம்பத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கம்பம்,
கம்பம் காமயகவுண்டன்பட்டி சாலையில் தனியார் திருமண மண்டபத்துக்கு எதிரே வாடகை கட்டிடத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவன ஊழியர்கள் பணத்தை நிரப்பிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஏ.டி.எம். மையம் இயங்காமல் இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.எம்.மையத்தில் பணம் நிரப்பும் தனியார் ஊழியர்கள் வந்து பார்வையிட்டுள்ளனர். அப்போது ஏ.டி.எம்.எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர்கள், சேதப்படுத்தி விட்டு பணத்தை கொள்ளையடிக்க முயன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து ஏ.டி.எம்.மைய பொறுப்பாளர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம்.மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். ஆனால் கண்காணிப்பு கேமரா கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.
இதனால் மர்மநபர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story