அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி சாவு
உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார். எஜமாரை காப்பாற்றச் சென்ற நாயும் மின்சாரம் தாக்கி பலியானது.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்தவர் மொக்கொசு (வயது 70) விவசாயி. இவர் நேற்று காலை ஊருக்கு அருகில் உள்ள தோட்டத்திற்கு தனது மாட்டை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உசிலம்பட்டி பகுதியில் பலத்த காற்று வீசியதால் தோட்டத்து வழியாக செல்லும் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை பார்க்காத மொக்கொசு, மாட்டை பிடித்தபடி மின் கம்பியை மிதித்தார்.
அதில் மின்சாரம் தாக்கி மொக்கொசு சம்பவ இடத்திலேயே பலியானார். மாடும் இறந்தது.
இந்த நிலையில் மொக்கொசு வளர்த்த நாய் உடன் சென்று. அது எஜமான் மின் கம்பி மீது விழுந்து கிடந்ததைப் பார்த்ததும், அவரை காப்பாற்ற மின் கம்பியை வாயில் பிடித்து இழுத்தது.
அதில் மின்சாரம் தாக்கி நாயும் சம்பவ இடத்திலேயே பலியானது. விசுவாசத்தால் தன் எஜமானரை காப்பாற்ற, நாய் உயிரை இழந்த சம்பவம் அந்த பகுதி மக்களின் மனதை நெகிழச்செய்தது.
தகவலறிந்து வந்த உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு கல்யாணக்குமார் ஆகியோர் நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். உத்தப்பநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜிகணேசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன் கூறுகையில், இந்த பகுதியில் மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அமைத்து பல வருடங்களாகிவிட்டது. எனவே பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளது. லேசாக காற்று அடித்தாலும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அறுந்து விடுகிறது.
இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்தப்பகுதியில் உள்ள மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story