கேரளாவில் இருந்து மதுரைக்கு லாரியில் கொண்டு சென்ற ரூ.22 லட்சம் ஏலக்காய் பறிமுதல்: வரி செலுத்தாததால் நடவடிக்கை


கேரளாவில் இருந்து மதுரைக்கு லாரியில் கொண்டு சென்ற ரூ.22 லட்சம் ஏலக்காய் பறிமுதல்: வரி செலுத்தாததால் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 July 2018 3:00 AM IST (Updated: 4 July 2018 10:55 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து மதுரைக்கு வரி செலுத்தாமல் எடுத்து சென்ற ரூ.22 லட்சம் மதிப்புள்ள ஏலக்காயை வணிகவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேனி,

கேரள மாநிலத்தில் இருந்து தேனி வழியாக பிற மாவட்டங்களுக்கு ஏலக்காய் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலத்துக்கு வணிக நோக்கில் சரக்குகளை கொண்டு செல்லும் போது ஐ.ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். ஐ.ஜி.எஸ்.டி. என்பது வியாபாரிகளின் நலன் கருதி உருவாக்கப்பட்ட ஒரு பெயரளவிலான வரி.

இந்தநிலையில் முறையாக வரி செலுத்தாமல் ஏலக்காய் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த புகாரை தொடர்ந்து, மாநில வணிக வரித்துறை அலுவலர் ஜெயா, உதவி அலுவலர் ராஜேஷ் பிரபு ஆகியோர் நேற்று முன்தினம் இரவில் போடி-மூணாறு சாலையில் முந்தல் அருகே இரட்டை வாய்க்கால் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியை மறித்து சோதனை செய்தனர். அந்த லாரியில் ஏலக்காய் மூட்டைகள் இருந்தன. அவை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி பகுதியில் இருந்து, மதுரையில் உள்ள நறுமணப் பொருட்கள் விற்பனை நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

மேலும் லாரியில் இருந்த ஆவணங்களை சோதனை செய்த போது, எந்த ஏலக்காய் அனுப்பி வைத்த நிறுவனம் முறையாக பதிவு செய்யாத நிறுவனம் என்றும், மதுரைக்கு கொண்டு செல்வதற்கு முறையாக வரி செலுத்தாததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரியையும், அதில் இருந்த ஏலக்காயையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தேனி வணிக வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘லாரியில் 3 ஆயிரத்து 865 கிலோ ஏலக்காய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.22 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஐ.ஜி.எஸ்.டி. வரியை செலுத்தி இருந்தால் மதிப்பு இன்னும் அதிகரித்து இருக்கும். இதற்கான வரி சுமார் ரூ.1 லட்சம் வரை வரும்.

எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை கணக்கீடு செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தெரிவிக்கப்படும். வரியை செலுத்திய பிறகு பறிமுதல் செய்த ஏலக்காய் ஒப்படைக்கப்படும்’ என்றனர்.

Next Story