அ.ம.மு.க. நிர்வாகிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்
அ.ம.மு.க. நிர்வாகிகள் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், அவைத்தலைவர் சொக்கநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் முன்னிலை வகித்தார். சிவகங்கை நகர செயலாளர் அன்புமணி வரவேற்றார். கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பேசியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்காக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கை பணிக்காக 4 தொகுதிகளுக்கும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் இணைந்து செயல்பட்டு பணியை முடிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் வந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறாது. அதனால்தான் தேர்தல் நடத்தாமல் தனி அதிகாரிகளின் பதவியை நீட்டித்து வருகின்றனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கின் தீர்ப்பு, காலம் கடத்துவதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்கு அனைத்து நிர்வாகிகளும் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அம்மா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி, இளைஞரணி இணை செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் மேப்பல் ராஜேந்திரன், பொருளாளர் சக்தி, ஒன்றிய செயலாளர்கள் முத்து, மந்தக்காளை, முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ச்சுனன், ஊராட்சி செயலாளர்கள் கண்ணன், சக்திமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் முத்து நன்றி கூறினார்.
Related Tags :
Next Story