லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் குறித்து கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் கூச்சல்–குழப்பம்
லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க கோரிய விஷயத்தில் கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் கூச்சல்–குழப்பம் ஏற்பட்டது.
பெங்களூரு,
லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க கோரிய விஷயத்தில் கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் கூச்சல்–குழப்பம் ஏற்பட்டது.
மக்களுக்கு வேலை வாய்ப்புகர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2–ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 3–வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் கோவிந்த் கார்ஜோள் கலந்து கொண்டு பேசியதாவது:–
பின்தங்கிய பகுதியான ஐதராபாத்–கர்நாடக பகுதிக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. அதன்படி அந்த துறைகளில் உள்ளூர் மக்களுக்கு அரசு துறை பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக அரசு சொல்கிறது. ஆனால் அதுபற்றிய புள்ளி விவரங்களை அரசு வழங்க வேண்டும். எந்தெந்த துறையில் அந்தப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த சபைக்கு தெரிவிக்க வேண்டும்.
எரிவாயு இணைப்புதெரு கூட்டுவது, துப்புரவு தொழில் போன்ற அடிமட்ட வேலைகளில் தான் இந்த அரசு அந்தப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் உரிய வாய்ப்பு அந்த மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அனில் பாக்ய(சமையல் கியாஸ் பாக்ய) திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைக்கவில்லை. அதுபற்றி கவர்னர் உரையில் இடம் பெறவில்லை.
மத்திய அரசு நாடு முழுவதும் 8 கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க முடிவு செய்துள்ளது. அதில் இதுவரை 4 கோடி குடும்பங்களுக்கு அந்த இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. இதில் கர்நாடகத்தில் இருந்து 9 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளது. சாலை திட்டங்களுக்காக கர்நாடகத்திற்கு மத்திய அரசு அதிக நிதி உதவி செய்துள்ளது. அதுபற்றி கவர்னர் உரையில் குறிப்பிடாதது ஏன்?.
விவசாய கடன் தள்ளுபடிஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக முதல்–மந்திரி குமாரசாமி கூறினார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. நாளை (அதாவது இன்று) குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் பேசினார்.
அதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர் ராஜ்குமார் பட்டீல் பேசுகையில், “ஐதராபாத்–கர்நாடக பின்தங்கிய பகுதி என்று அப்பகுதியை பற்றி பேசும் போதெல்லாம் குறிப்பிடுகிறார்கள். ஐதராபாத்–கர்நாடக என்று சொல்வது எங்களுக்கு வேறு பகுதியை போலவே தோன்றுகிறது. அதனால் ஐதராபாத்–கர்நாடக என்று அழைப்பதை தவிர்த்துவிட்டு, ‘நல கர்நாடக‘ என்று அழைக்க வேண்டும்“ என்றார்.
தக்க பாடம் புகட்டினர்அவர் தொடர்ந்து பேசுகையில் பசவண்ணர் பற்றி குறிப்பிட்டு பேசினார். அப்போது, பா.ஜனதா உறுப்பினர் ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி குறுக்கிட்டு, “அரசியல் நோக்கத்திற்காக தேர்தலுக்கு முன்பு வீரசைவ லிங்காயத் சமூகத்தை முந்தைய காங்கிரஸ் அரசு உடைத்தது. இதனால் அந்த கட்சிக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டினர். ஆயினும் பின்வாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது“ என்றார்.
இதற்கு நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். லிங்காயத் சமூகத்தை உடைக்கும் வேலையை காங்கிரஸ் அரசு செய்யவில்லை. லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று யார்–யார் மனு கொடுத்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா?“ என்றார்.
கூச்சல்–குழப்பம்அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து குரலை உயர்த்தி பேசினர். பதிலுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் சில காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். இதனால் சபையில் வாக்குவாதம் முற்றி கூச்சல்–குழப்பம் உண்டானது. இறுதியில் சபாநாயகர் தலையிட்டு, இருதரப்பினரையும் இருக்கையில் அமரும்படி கூறினார். அதைத்தொடர்ந்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.