முதுகுளத்தூர் அருகே விவசாயி அடித்துக்கொலை; 7 பேர் கைது
முதுகுளத்தூர் அருகே பேரையூரில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 52). விவசாயி. இவரது தம்பி முருகேசன், கடந்த உள்ளாட்சி தேர்தலில் சின்ன ஆனையூரை சேர்ந்தவர்களுக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக அவரை தேடி ஒரு கும்பல் பேரையூருக்கு வந்தது. அப்போது முருகேசன் இல்லாததால், அவரது அண்ணன் காளிதாசை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அடித்து கொலை செய்தனர்.
இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து சின்ன ஆனையூரை சேர்ந்த அழகர்சாமி மகன்கள் அழகுராஜா, அலெக்ஸ் பாண்டியன், தவசி மகன் ராஜா, பரட்டை மகன் முனியாண்டி, கூலையன் மகன் மாயழகு, மலையாண்டி மகன் கார்த்திக், முனியாண்டி மகன் முனியசாமி ஆகிய 7 பேரை கைது செய்தார். இதுதொடர்பாக மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
விவசாயி காளிதாஸ் தாக்கப்பட்டபோது அந்த பகுதி வியாபாரிகள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது போலீஸ்காரர் செல்வம்(35) என்பவர் வந்து தடுத்த போது, அவரையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். அதில் காயமடைந்த அவர் கமுதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story