சிவகாசி: போலி பீடி லேபிள் தயாரித்த 3 வாலிபர்கள் கைது
சிவகாசியில் போலி பீடி லேபிள் தயாரித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான அச்சுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல பீடி நிறுவனங்களின் போலி லேபிள்கள் அதிக அளவில் தயாரித்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மதுரை டி.வி.எஸ். நகரை சேர்ந்த முகமதுஅப்துல்லா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் விஸ்வநத்தம் பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் நேற்று முன்தினம் திடீர் சோதனை செய்தனர். இதில் பிரபல பீடி நிறுவனங்களின் லேபிள்கள் போலியாக தயார் செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த அச்சகத்தில் இருந்த ஆதிமணி (வயது29), தங்கராஜ் (27), மாரியப்பன்(32) ஆகியோரை போலீசார் கைது செய்து போலி லேபிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதே போல் கடந்த மாதம் 13-ந்தேதி சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நாரணாபுரம் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்தில் போலி லேபிள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த திருப்பதி (23) என்பவரை கைது செய்து தங்கராஜ், முத்து ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது விஸ்வநத்தம் பகுதியில் போலி லேபிள் தயாரித்த 3 வாலிபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
சிவகாசியில் இதுபோன்ற போலி லேபிள்கள் பல இடங்களில் தயாரிக்கப்பட்டு வருவதாக பீடி உற்பத்தியாளர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். எனவே போலீசார் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story