கஞ்சா விற்பனைக்கு மாணவர்களை மர்ம கும்பல் பயன்படுத்துகிறதா?
சரவணம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு மாணவர்களை மர்ம கும்பல் பயன்படுத்து கிறதா? என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சரவணம்பட்டி,
கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- சில மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதற்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கு மாணவர்களின் சிகை அலங்காரம், உடையை வைத்து அடையாளம் கண்டு அவர்களிடம் நட்பாக பேசி அவர்களிடம் முதலில் விற்பனை செய்து அவர்களை கஞ்சாவிற்கு அடிமையாக்குகின்றனர். பிறகு அவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். மற்றும் ஏழை மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பணத்தின் மீது ஆசை காட்டி அவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். ஆகவே இந்த கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் கூறும்போது, ‘ஏற்கனவே கடந்த மாதம் சரவணம் பட்டி பகுதியில், கஞ்சா விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்யப்படு கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா விற்பனை செய்வதற்கு மாணவர்களையே ஏஜெண்டுகளாக நியமிக்கும் நபர்கள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். இது தொடர்பாக சரவணம்பட்டி பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
Related Tags :
Next Story