பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரி பள்ளப்பாளையம் பேரூராட்சி முற்றுகை
பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரி பள்ளப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர்,
சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 130-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரி நேற்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமென்று கோஷங்களை எழுப்பி னர். இதனிடையே முற்றுகையிட வந்த பெற்றோர், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி அரசியல் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் நேரில் வந்து சமரசம் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்ற பெற்றோர் மற்றும் பொதுமக்கள், மாணவர்களோடு அவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஊர்வலமாக சென்று, குழந்தைகளை பள்ளியின் உள்ளே போக அனுமதிக்க மாட்டோம் என்று பள்ளிக்கு முன்பாக சாலையில் அமர்ந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு வந்து இதுகுறித்து முடிவு எடுத்த பிறகு தான் குழந்தைகளை படிக்க பள்ளிக்கு அனுப்புவோம் என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பாரதிபுரம் ஒன்றிய தொடக்கப்பள்ளி 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பள்ளி கட்டிடம், கழிப்பிட அறைகள் மற்றும் சுற்று சுவர்கள் சரியான பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் பள்ளிக்குள் புகுந்து வளாகத்தை சேதப்படுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூட சுவர்கள் சேதம் அடைந்து உள்ளதால் எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து பலமுறை உயர் அதிகாரிகளிடமும், பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பேசியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான், குழந்தைகளின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பொது மக்கள் கூறினர்.
பள்ளி தலைமை ஆசிரியை கூறும்போது, பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில், சூலூர் தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் வட்டார கல்வி அதிகாரி ரமேஷ் பாபு ஆகியோர் பொதுமக்கள் மற்றும் பெற்றோருடன் பேசி, இப்போது இருக்கும் பள்ளியின் பழைய கட்டிடத்தை இடித்து, புதிய கட்டிடம் அதே இடத்தில் கட்டி தரப்படும் என உறுதி அளித்தனர். அதுவரை, பாரதிபுரம் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக குழந்தைகளை அனுப்பி அங்கு தொடக்க கல்வி வகுப்புகள் நடத்தப்படும் என கூறினர்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர். சில நாட்களுக்கு முன்பு சூலூர் பகுதி ஒன்றிய தொடக்க பள்ளிகளில், மர்ம நபர்களால் தீ வைப்பு, பள்ளிக்குள் புகுந்து சூறைஆகிய சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story