அண்ணாநகர் மேற்கில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு ஊழியர்கள் குடியிருப்பு வீடுகளை காலி செய்ய குடியிருப்புவாசிகள் முடிவு


அண்ணாநகர் மேற்கில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு ஊழியர்கள் குடியிருப்பு வீடுகளை காலி செய்ய குடியிருப்புவாசிகள் முடிவு
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாநகர் மேற்கில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், இதனால் வீடுகளை காலி செய்ய உள்ளதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்து உள்ளனர்.

அம்பத்தூர்,

சென்னை அண்ணாநகர் மேற்கு பாடிக்குப்பம் சாலையில் உள்ள கோவில் தெருவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.67.9 கோடியில் 272 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 2016-17-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த புதிய வீடுகளில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு ஊழியர்கள் குடியிருந்து வருகிறார்கள். சென்னை அண்ணாநகர் மேற்கு பார்க் ரோடு பழைய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வந்த தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் 197 பேருக்கு இங்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனையடுத்து அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த குடியிருப்பில் குடிநீர் இன்றி அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் தவித்து வருகிறார்கள். மஞ்சள் நிறத்தில் வரும் நிலத்தடிநீரில் அதிகஅளவு உப்பு தன்மை கலந்துள்ளதால் இதனை பயன்படுத்த இயலவில்லை. இதுகுறித்து குடியிருப்புவாசிகள் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதனையடுத்து குடிநீருக்காக 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த தொட்டிகளில் குடிநீர் கொண்டு வந்து நிரப்புவது இல்லை. இதனால் தனியார் லாரிகளில் கொண்டுவரப்படும் குடிநீரை குடம் ஒன்றுக்கு 8 ரூபாய் கொடுத்து வாங்கி குடியிருப்புவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.


மேலும் இரவு நேரத்தில் குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் பெரும்பாலான மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இந்த குடியிருப்பு இருளில் மூழ்கி விடுகிறது. மழைக்காலங்களில் குடியிருப்பில் மழைநீர் தேங்கி கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் வீசுகிறது. தலைமைச்செயலக ஊழியர்கள் அலுவலகம் சென்றுவர பழைய குடியிருப்பில் இருந்து மாநகர பஸ் இயக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த புதிய குடியிருப்பில் பஸ் வசதி இதுவரை செய்து தரப்படவில்லை என அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் நீர் கசிவு இருப்பதாகவும், தரைகளில் உள்ள ‘டைல்ஸ்கள்’ பெயர்ந்தும் காணப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


மேலும், போதுமான பாதுகாப்பு இல்லாததால் வெளிநபர்கள் அத்துமீறி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து விடுவதால் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. மேலும் தரையில் பல இடங்களில் மின்சார வயர்கள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படுவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் கூறுகின்றனர்.

இப்படி எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராத நிலையில் இந்த குடியிருப்பில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வீடுகளை காலி செய்து சென்றுவிட்டனர்.

இந்த குடியிருப்பில் தற்போது வசித்து வரும் பல அரசு ஊழியர்கள் கூறும்போது, ‘நாங்கள் பலமுறை முறையிட்டும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த குடியிருப்பை காலிசெய்து வேறு வீடுகளுக்கு வாடகைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை’ என்று தெரிவித்தனர்.



Next Story