கிராம மக்கள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


கிராம மக்கள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 5 July 2018 5:15 AM IST (Updated: 5 July 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

நிலப்பிரச்சினை குறித்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அடிப்படை வசதி கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராக அரசு வக்கீலை நியமிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

தலித் விடுதலை இயக்கம் சார்பில் திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 4-ந் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்து அமர்ந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் “நீங்கள் யார்? எதற்காக வந்திருக்கிறீர்கள்” என்று கேட்டனர்.

அவர்கள், “நாங்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக தலித் விடுதலை இயக்க தலைவர் ஞானசேகரன், மாவட்ட தலைவர் அமுல்சாமி ஆகியோரது தலைமையில் வந்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இங்கேயே உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம்” என்று கூறி அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறுகையில், “நாங்கள் வசித்து வரும் நிலம் தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை உள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு பல மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் நடவடிக்கை ஏதும் இல்லை. நிலம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ஆஜராக வேண்டும். அவர் ஆஜராகாததால் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. குடிநீர், மின் வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். மின் இணைப்பு பெற உடனடியாக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் உண்ணாவிரதம் இருப்போம். இங்கிருந்து செல்ல மாட்டோம்” என்றனர்.

பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டும் கிராம மக்கள் கலைந்து செல்லாமல் வளாகத்திலிலேயே அமர்ந்திருந்தனர். பின்னர் அவர்களில் சிலரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜானகியை (பொது) சந்திக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். அவர்கள் நேர்முக உதவியாளரிடம் சென்று கோரிக்கை குறித்து மனு வழங்கினர்.

அதற்கு நேர்முக உதவியாளர் ஜானகி, வரும் 6-ந் தேதி கோர்ட்டில் நடைபெறும் வழக்கில் வக்கீல் ஆஜராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெளியே வந்த தலித் விடுதலை இயக்க தலைவர் ஞானசேகரன் கூறுகையில், “கோர்ட்டில் அரசு வக்கீல் ஆஜராகா விட்டால் வருகிற 9-ந் தேதி முதல் எங்களது போராட்டத்தை தொடருவோம்” என்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story