ஸ்மார்ட் கார்டுதாரர்கள் 2 ஆக பிரிப்பு: ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை


ஸ்மார்ட் கார்டுதாரர்கள் 2 ஆக பிரிப்பு: ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை கண்காணிக்க கடைகள் வாரியாக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக் டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பேசும்போது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அந்தந்த தாலுகா வாரியாக தாசில்தார்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள 1,035 ரேஷன் கடைகளிலும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் முறைகேடு நடப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பொதுமக்களின் வாழ்வாதார அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுதாரர்கள், முன்னுரிமை வீட்டு பட்டியல், முன்னுரிமை இல்லாத வீட்டு பட்டியல் என 2ஆக பிரிக்கப்பட்டுள்ளனர்.


முதியோர் உதவித்தொகை பெறுவோர், விதவை அல்லது பெண்கள், 40 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் ஆகியோரை தலைவர்களாக கொண்டு செயல்படும் குடும்பத்தினர் முன்னுரிமை வீட்டு பட்டியலின் கீழ் வருவார்கள்.

வருமான வரி, தொழில் வரி செலுத்துவோர், அரசு பணியில் உள்ளவர்கள், வருடத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் குடும்ப வருமானம் உள்ளவர்கள், சொந்த தேவைக்காக 4 சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள், 3 படுக்கை அறை கொண்ட வீடு, வீட்டில் குளிர்சாதன எந்திரம் வைத்துள்ளவர்கள், வணிக நிறுவனம் நடத்துபவர்கள் முன்னுரிமை இல்லாத வீட்டு பட்டியலில் வருவார்கள். இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வழக்கமான விகிதத்தில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். முன்னுரிமை வீட்டு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒருவருக்கு 5 கிலோ அரிசி என்ற விகிதத்தில் வழங்கப்படும், என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, உதயகுமார் எம்.பி. மற்றும் முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சனிடம் கேட்டபோது, மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2 லட்சத்து 50 ஆயிரத்து 772 ஸ்மார்ட் கார்டுதாரர்கள் முன்னுரிமை வீட்டு பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் உள்ள குடும்ப உறுப்பினர்களில், ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் வழங்கப்படும். இதனை பொதுமக்கள் கடைக்காரர்களிடம் தெரிவித்து பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். இது குறித்து பொதுமக்கள் அறிய வசதியாக, ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவரின் புகைப் படம் அமைந்துள்ள இடத்தின் கீழே குறியீடு இருக்கும். யாருக்காவது கோதுமை தேவைப்பட்டால், அரிசியின் எடையை குறைத்துக்கொண்டு, அந்த எடைக்கு ஏற்றவாறு கோதுமையை வாங்கிக்கொள்ளலாம்.

பொருட்கள் வினியோகத்தில் ஏதேனும் குறைபாடு அல்லது முறைகேடு நடந்தால், அதுகுறித்து 1967 அல்லது 18004255901 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்களும் ஸ்மார்ட் கார்டின் பின்புறம் இடம்பெற்று இருக்கும். இந்த எண்களில் சிலர் தொடர்பு கொண்டு தவறாக தகவல்களை தருகின்றனர். இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை அறிந்து சமுதாய அக்கறையுடன் பொதுமக்கள் உண்மையான புகார்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும், என்றார்.

Next Story