திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்ற அரசமரம் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது


திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்ற அரசமரம் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது
x
தினத்தந்தி 5 July 2018 4:30 AM IST (Updated: 5 July 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

அரச மரத்தை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடவு செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தின் நடுவே இருந்த காலி இடத்தில் ஒரு அரசமரம் தானாக முளைத்து நன்கு வளர்ந்திருந்தது. இதற்கிடையே, மாநகராட்சி மூலம் ரூ.5 கோடி மதிப்பில் பஸ்நிலையத்தை விரிவாக்க அரசு திட்டமிட்டது. அதன்படி, கடந்த மாதம் பஸ்நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அந்த அரசமரம் இருந்த இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இதன்காரணமாக அரச மரத்தை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடவு செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுதொடர்பாக, ஏற்கனவே பல்வேறு மரங்களை மாற்று இடத்தில் நட்டு பராமரித்து வரும் ‘திண்டிமாவனம்’ அமைப்பின் நிர்வாகிகளை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அப்போது, நாங்களே மரத்தை வேரோடு பிடுங்கி கோபாலசமுத்திர குளத்தின் கரையில் நட்டு பராமரித்து கொள்கிறோம் என்று ‘திண்டிமாவனம்’ நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி, நேற்று மாலை பொக்லைன் எந்திரத்தின் மூலம் மரம் வேரோடு பிடுங்கப்பட்டது. மருத்துவமனை வழியாக கோபாலசமுத்திர குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த குழியில் பொக்லைன் எந்திரம் மூலம் மரம் இறக்கப்பட்டது. பின்னர், மரத்தை தூக்கி நிறுத்தி செம்மண் நிரப்பி தண்ணீர் ஊற்றப்பட்டது.

இதுகுறித்து, ‘திண்டிமாவனம்’ நிர்வாகிகள் கூறியதாவது:-

நாங்கள் ஏற்கனவே, திண்டுக்கல் சப்-கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் இடத்தில் நின்றிருந்த 60 வருட அரச மரத்தை பிடுங்கி கலெக்டர் அலுவலகத்தில் நட்டுள்ளோம். தற்போது அந்த மரம் நன்கு துளிர்விட்டு வளர்ந்துள்ளது. இதேபோல, 62 மரங்களை பிடுங்கி நட்டுள்ளோம். இது ‘திண்டிமாவனம்’ மூலம் மாற்று இடங்களில் நடப்படும் 63-வது மரம் ஆகும்.

இந்த மரம் 35 அடி உயரம் உள்ளது. மரம் முளைத்து 15 வருடங்கள் இருக்கும். தற்போது, கோபாலசமுத்திர குளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலின் எதிரே நட்டுள்ளோம். இதனை, ‘திண்டிமாவனம்’ ஊழியர்களே தினந்தோறும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story