ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 4-வது நாளாக தீ: மாநகராட்சியை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 4-வது நாளாக தீ: மாநகராட்சியை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2018 3:49 AM IST (Updated: 5 July 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

ராமையன்பட்டி குப்பை கிடங்கில் நேற்று 4-வது நாளாக தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து மாநகராட்சியை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. அங்கு மாநகராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அங்குள்ள குப்பையில் கடந்த 1-ந்தேதி திடீரென்று தீப்பிடித்தது. காற்று பலமாக வீசுவதால் தீ பரவி எரிந்து வருகிறது. பேட்டை, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. நேற்று 4-வது நாளாக குப்பையில் தீப்பிடித்து எரிந்தது.

இந்த தீவிபத்து காரணமாக சுற்றுவட்டார பகுதியில் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் ராமையன்பட்டி, சிவாஜி நகர், அரசு புது காலனி, சைமன் நகர், தச்சநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மாநகராட்சியை கண்டித்தும், குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தும், குப்பையில் பிடித்த தீயை உடனடியாக அணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராமையன்பட்டியில் வீரன் சுந்தரலிங்கனார் பேரவை தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறும்போது, ‘நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் புகையால் கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்றவை ஏற்படுகின்றன. குப்பை கிடங்கில் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிபத்தை தடுக்க நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story