அந்தேரியில் நடைமேம்பாலம் இடிந்து விபத்து 17½ மணி நேரத்துக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கியது
அந்தேரியில் தண்டவாளத்தில் இடிந்து விழுந்த நடைமேம்பாலத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்டு, 17½ மணி நேரத்துக்கு பிறகு ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
மும்பை,
அந்தேரியில் தண்டவாளத்தில் இடிந்து விழுந்த நடைமேம்பாலத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்டு, 17½ மணி நேரத்துக்கு பிறகு ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. வேககட்டுப்பாடு காரணமாக நேற்று மின்சார ரெயில்கள் தாமதமாக இயங்கின.
நடைமேம்பாலம் இடிந்தது
மும்பையில் நேற்றுமுன்தினம் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக நகரம் வெள்ளக்காடாக மாறியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேற்கு புறநகர் பகுதியான அந்தேரியின் கிழக்கு, மேற்கு பகுதியை இணைக்கும் வகையில் அமைந்துள்ள கோகலே ரெயில்வே பாலத்தின் நடைமேம்பால பகுதி காலை 7.30 மணியளவில் திடீரென தண்டவாளத்தின் மீது இடிந்து விழுந்தது.
அங்குள்ள பிளாட்பாரத்தின் மேற்கூரையும் சரிந்தது. ரெயிலுக்கு மின்சப்ளை கொடுக்கும் ஓவர்ஹெட் மின்கம்பிகள் அறுந்தன. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
17½ மணி நேரம்
நடைமேம்பாலத்தின் இடிபாடுகள் அங்குள்ள 6 வழித்தடங்கள் மீது விழுந்து கிடந்ததால் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை முற்றிலும் முடங்கியது. 800-க்கும் மேற்பட்ட ெரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நீண்டதூர ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் பரிதவித்தனர்.
இந்தநிலையில், தண்டவாளத்தின் மீது விழுந்து கிடந்த நடைமேம்பாலத்தின் இடிபாடுகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடந்தன. ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளங்களை சரி செய்து, ஓவர்ஹெட் மின் கம்பிகளை பொருத்தும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
இந்த பணிகள் மின்னொளி வெளிச்சத்தில் இரவும் நடந்தது. பணிகள் முடிய 17½ மணி நேரம் ஆனது. நேற்று அதிகாலை 1 மணியளவில் தான் பணிகள் அனைத்தும் முடிந்தன. இதன் பின்னர் வழக்கம் போல் அந்த வழித்தடங்களில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
ரெயில்கள் தாமதம்
மேற்படி நடைமேம்பாலம் இருந்த இடத்தில் வழக்கமாக மின்சார ரெயில்கள் 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். நேற்று அந்த பகுதியில் வேககட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார ரெயில்கள் அந்த இடத்தில் 20 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.
இதனால் மின்சார ரெயில் சேவைகள் 10 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரையிலும் தாமதமாக இயங்கின.
இதன் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். காலை 6.58 மணிக்கு இயக்கப்படும் முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.
Related Tags :
Next Story