கே.வி.குப்பம் அருகே ரூ.3½ லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல்


கே.வி.குப்பம் அருகே ரூ.3½ லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல்
x
தினத்தந்தி 5 July 2018 5:30 AM IST (Updated: 5 July 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே ரூ.3½ லட்சம் கேட்டு வாலிபரை கடத்திச்சென்றுவிட்டதாக நள்ளிரவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

வேலூர், 

கே.வி.குப்பத்தை அடுத்த பெருமாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் அனில்குமார் (வயது 25). சேகர் பெங்களூருவில் கிரில் கதவுகளில் வைக்கப்படும் பூ போன்றவற்றை டிசைன் செய்யும் தொழில் செய்து வருகிறார். அதை அனில்குமார் கடைகளுக்கு வினியோகம் செய்து வந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு கடைக்கும் வினியோகம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பகலில் அனில்குமாரும், அவருடைய தாய் உஷாராணியும் வீட்டில் இருந்தனர். அப்போது அனில்குமார் செல்போனுக்கு அடிக்கடி அழைப்பு வந்தது.

அதில் பேசியவர்கள் அனில்குமாரை தனியாக அழைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து அனில்குமார் கே.வி.குப்பம் சென்றுவருவதாக தனது தாய் உஷாராணியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மாலை 6 மணியளவில் உஷாராணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் சேத்துப்பட்டு பகுதியில் கடைவைத்திருக்கும் நபர்கள் பேசி உள்ளனர். அவர்கள் அனில்குமார் தங்களுக்கு ரூ.3½ லட்சம் தரவேண்டும் என்றும், அதற்காக அவரை சென்னைக்கு கடத்திச்சென்றுவிட்டதாகவும் கூறி, பணத்தை கொடுத்துவிட்டு அனில்குமாரை மீட்டுச்செல்லுமாறு கூறியிருக்கிறார்கள்.

தொடர்ந்து அனில்குமாரும் பயந்தபடி பேசியிருக்கிறார். அப்போது தன்னை கடத்திச்சென்றிருப்பதாகவும், மீட்டுச்செல்லுமாறும் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சேகர், உஷாராணி மற்றும் உறவினர்கள் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். ஆனால் அங்கு புகார் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நேற்று இரவு 11.30 மணிக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

Next Story