விசாரணை பாரபட்சமாக நடக்கும் வரை இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் திட்டவட்டம்


விசாரணை பாரபட்சமாக நடக்கும் வரை இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் திட்டவட்டம்
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

பாரபட்சமான விசாரணை நடக்கும் வரை இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மும்பை, 

பாரபட்சமான விசாரணை நடக்கும் வரை இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய மதபோதகர்

மும்பையை சேர்ந்த 51 வயதான மதபோதகர் ஜாகீர் நாயக். இவரது மதபோதனைகளுக்கு சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினர் இடையே பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அதேநேரத்தில் ஜாகீர் நாயக்கின் போதனைகளால் சர்ச்சைகளும் ஏற்பட்டன. இவரது பேச்சுகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டுமாறு செயல்பட்டதாக குற்றம்சாட்டி தேசிய புலனாய்வு முகமை ஜாகீர் நாயக் மீது வழக்குப்பதிவு செய்தது. இது தவிர சட்டவிரோத பணபரிமாற்றம், வெறுப்பு பிரசாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்தியாவுக்கு திரும்பமாட்டேன்...

இதைத்தொடர்ந்து மலேசியா நாட்டில் தஞ்சமடைந்த ஜாகீர் நாயக், தற்போது வரை இந்தியா திரும்பவில்லை. இவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கு விசாரணையில் ஆஜர்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஜாகீர் நாயக் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்து ஜாகீர் நாயக் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான் இந்தியாவுக்கு வருவதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை. எனக்கு எதிராக பாரபட்சமான முறையில் விசாரணை நடக்கிறது. அந்த விசாரணை எப்போது பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேனோ அதுவரையில், இந்தியா வருவதற்கு எந்தவித திட்டமும் இல்லை. விசாரணையில், அரசு நியாயமாக நடந்து கொள்ளும் போது நான் நிச்சயம் தாய் நாடு திரும்புவேன்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

Next Story