சுரங்கப்பால சந்திப்பில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்


சுரங்கப்பால சந்திப்பில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 5 July 2018 5:45 AM IST (Updated: 5 July 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் சுரங்கப்பால சந்திப்பில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

திருப்பூர், 

திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் இருந்து லட்சுமி நகர் செல்வதற்காக ஊத்துக்குளி ரோடு, ரெயில் தண்டவாளத்தை கடக்கும் வகையில் டி.எம்.எப். மருத்துவமனை அருகே சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளி ரோட்டில் வாகனங்கள் பாலம் வழியாக தடையின்றி சென்று வருகிறது. அதுபோல் கோர்ட்டு ரோட்டில் இருந்து ரெயில் நிலையம் செல்வதற்கும், ஊத்துக்குளி ரோட்டுக்கு செல்வதற்கும் இணைப்பு ரோடு இருபுறமும் உள்ளது. இந்த இரு ரோடுகளும் இருவழிப்பாதையாக உள்ளது.

திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் இருந்து லட்சுமி நகர், கொங்குநகர் பகுதிக்கு செல்பவர்கள் சுரங்கப்பாலம் வழியாக எளிதாக சென்று வருகிறார்கள். இதன்காரணமாக ஊத்துக்குளி ரோடு ரெயில்வே சுரங்கப்பால சந்திப்பில் போக்கு வரத்து நிறைந்து காணப்படுகிறது. கோர்ட்டு ரோட்டில் இருந்து சுரங்கப்பாலம் செல்லும் நுழைவு பகுதியில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

அதாவது கோர்ட்டு ரோட்டில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி செல்பவர்களும், வருபவர்களும், ஊத்துக்குளி ரோடு நோக்கி செல்பவர் களும், வருபவர்களும் சுரங்கப்பாலத்தின் நுழைவு சந்திப்பு பகுதியில் திரும்பும்போது அந்த இடத்தில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக மினிபஸ்கள், வேன்கள், லாரிகள் சுரங்கப்பாலத்தில் இருந்து வந்து இணைப்பு ரோடுகளுக்கு திரும்பும் சமயத்தில் வாகன நெருக்கடி அதிகம் ஏற்படுகிறது. தாறுமாறாக 3 ரோடுகளுக்கும் செல்வதற்கு வாகனங்கள் திரும்பும்போதும் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்ப்பதற்கு கோர்ட்டு ரோட்டில் இருந்து சுரங்கப்பாலம் செல்லும் நுழைவு பகுதியில் ரவுண்டானா அமைத்தால் வாகனங்கள் வரிசையாக நெரிசல் இல்லாமல் செல்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் அங்கு போக்குவரத்து காவலரை நியமித்து ஒழுங்குபடுத்தினால் மிகவும் வசதியாக இருக்கும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இதை கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா?

Next Story