11 ஆடுகளை திருடி விற்ற 3 பேர் கைது; ரூ.27 ஆயிரம் பறிமுதல்
பல்லடம் அருகே 11 ஆடுகளை திருடி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எல்லவாவியை சேர்ந்த கருப்பணன் (வயது 75), பொன்னி முத்துக்கவுண்டன்புதூரில் தனது 11 ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் குடிக்க சென்ற போது அவரது 11 ஆடுகளையும் யாரோ திருடி சென்றுவிட்டனர். கருப் பணன் பல இடங்களில் தேடிப்பார்த்தும் 11 ஆடுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கருப்பணனின் மகள் லட்சுமி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பல்லடம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ஆடுகள் திருட்டுப்போனது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பல்லடம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேரும் கருப்பணனின் 11 ஆடுகளையும் திருடி கன்னிவாடி சந்தைக்கு கொண்டு சென்று விற்றதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாத்தம்பாடியை சேர்ந்த ரகுபதி (35), மற்றும் அதே ஊரைச்சேர்ந்த சுரேஷ் என்ற ஆசை (20), சென்னிமலை அரச்சலூரை சேர்ந்த சக்தி (29) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதில் சக்தி என்பவர் மாதப்பூரில் உள்ள ஒரு தறிக்குடோனில் வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது நண்பர்கள் ரகுபதி, சுரேஷ் என்ற ஆசையுடன் சேர்ந்து 11 ஆடுகளையும் திருடிச்சென்று விற்றது தெரிய வந்தது. இதையடுத்து பல்லடம் போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்கள் ஆடுகளை விற்று வைத்திருந்த ரூ.27 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story