பஸ்சில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல்
கடலூரில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் மேற்பார்வையில் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி, ஏட்டுகள் முத்துக்குமார், குகன், நரசிம்மன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ்சை நிறுத்தி, அதில் இருந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். மேலும் பஸ்சின் பக்கவாட்டில் பார்சல்களை வைக்கும் அறைகளை திறந்து பார்த்த போது அதில் 8 அட்டைப்பெட்டிகள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் ஒரு பெட்டியை பிரித்து பார்த்தபோது அதில் மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மொத்தம் 8 பெட்டிகளில் 558 மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து அட்டை பெட்டிகளை எடுத்து வந்த நபர் குறித்து விசாரணை நடத்திய போது, அவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த குணசேகரன்(வயது 35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து குணசேகரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சென்னையில் உள்ள உறவினர் வீட்டு விழாவில் விருந்து கொடுப்பதற்காக கடலூரில் இருந்து மதுபாட்டில்களை பஸ்சில் கடத்தியதும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக அட்டை பெட்டியின் மேல்பகுதியில் சாக்கால் மூடி வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story