மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
ஊராட்சி எழுத்தர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையாற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடலூர் மாவட்டத்திலும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரிந்து வரும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பெரும்பாலானோர் வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட துணை தலைவர்கள் பெரியசாமி, சோழன், சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அலுவலர்கள் யாரும் பணிக்கு வராததால் ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பண்ருட்டி வட்டார தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜ்குமார், மாநில நிர்வாகி மலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் மற்ற ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்திலும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் வீடு கட்டும் திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story