தொண்டி பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் அவதி


தொண்டி பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 5 July 2018 9:45 PM GMT (Updated: 5 July 2018 5:51 PM GMT)

தொண்டி பேரூராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.

தொண்டி,

தொண்டி பேரூராட்சியில் 20,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். காவிரி குடிநீர் திட்டம் மூலம் தினமும் சுமார் 10 லட்சம் லிட்டர் வரை குடிநீர் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஒருவாரமாக சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் சீரமைப்பு காரணமாக தொண்டிக்கு காவிரி குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டது.

இந்த நிலையில் தொண்டி பேரூராட்சியின் தனி குடிநீர் திட்டமான சேந்தனி, ஆட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் தற்போது திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதையொட்டி குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுஉள்ளதால் தொண்டிக்கு குடிநீர் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டுஉள்ளது. இதனால் இங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தொண்டி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் வால்வு தொட்டிகளில் கசிந்து ஓடும் தண்ணீரை நீண்டநேரம் காத்திருந்து குடங்களில் சேகரித்து செல்கின்றனர். மேலும் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி கூறியதாவது:- காவிரி குடிநீர் குழாய்கள் சீரமைப்பு பணிகள் காரணமாக தொண்டி பேரூராட்சிக்கு தடைபட்டிருந்த குடிநீர் வினியோகம் மீண்டும் செயல்பட தொடங்கிஉள்ளது. தினமும் சுமார் 10 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பகுதி வாரியாக பிரித்து வினியோகம் செய்து வருகிறோம். பேரூராட்சியின் தனி குடிநீர் திட்டமான சேந்தனி, ஆட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் தற்போது திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதையொட்டி குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுஉள்ளதால் தொண்டிக்கு குடிநீர் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டுஉள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் இரு தினங்களில் குடிநீர் வினியோகம் சீராக நடைபெற உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்த நிலையில் தொண்டி பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் தடைபட்டு உள்ளததால் பொதுமக்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை அடிப்படையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story