திருப்பரங்குன்றத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து மனைவி, மகள் கொலை உடலில் பற்றி எரிந்த தீயுடன் தப்ப முயன்ற வியாபாரியும் பலி


திருப்பரங்குன்றத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து மனைவி, மகள் கொலை உடலில் பற்றி எரிந்த தீயுடன் தப்ப முயன்ற வியாபாரியும் பலி
x
தினத்தந்தி 6 July 2018 3:30 AM IST (Updated: 6 July 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்கச்செய்து, மனைவியையும், 6 வயது மகளையும் கொலை செய்துவிட்டு, உடலில் பற்றி எரிந்த தீயுடன் தப்ப முயன்ற வியாபாரியும் இறந்து போனார்.

திருப்பரங்குன்றம்,

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் லட்சுமி தெருவில் வசித்து வந்தவர் ராமமூர்த்தி (வயது 45). சாக்லெட் வியாபாரி. இவருடைய மனைவி காஞ்சனா (38). இவர்களுக்கு அட்சயா (6) என்ற ஒரு பெண் குழந்தை இருந்தார். இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள்.

ராமமூர்த்தியின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை. அங்கிருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் வந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சாக்லெட் வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிட்டார். அதற்கு அவர் கடன் வாங்கினார். அதில் எதிர்பார்த்தபடி லாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ராமமூர்த்தி வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமலும், கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும் கஷ்டப்பட்டு வந்தார்.

கடந்த 2 மாதங்களாக அவர் வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்து ராமமூர்த்தி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.


இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணிஅளவில் ராமமூர்த்தியின் வீட்டில் திடீரென்று கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ந்து விழித்தெழுந்து வெளியே ஓடிவந்தனர்.

அப்போது ராமமூர்த்தியின் வீட்டிற்குள் தீ மளமளவென பிடித்து எரிந்து, கரும்புகை வெளியேறிக்கொண்டு இருந்தது. சிலிண்டர் வெடித்ததால் நாலாபுறமும் சுவர்கள் பிளந்து பொருட்கள் சேதமாகிக்கிடந்தன.

படுக்கை அறையில் அசந்து தூங்கிய நிலையில், ராமமூர்த்தியின் மனைவி காஞ்சனாவும், அட்சயாவும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர்.

உடலில் பற்றி எரிந்த தீயுடன் ராமமூர்த்தி வெளியே ஓடி வந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து போனார்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை கவனித்தனர். திருநகர் போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சமையல் அறையில் இருக்க வேண்டிய 2 சிலிண்டர்களும் படுக்கை அறையில் சோபாவுக்கு பக்கவாட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டது ஏன் சந்தேகம் எழுந்தது. மேலும், காஞ்சனாவும், அட்சயாவும் படுக்கையிலேயே இறந்த கிடந்ததும், ராமமூர்த்தி மட்டும் வெளியே ஓடி வந்ததும் சந்தேகத்தை அதிகரிக்கச்செய்தது.

இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தியபோது, ராமமூர்த்தியே கியாஸ் சிலிண்டரை திறந்து வெடிக்க வைத்து, மனைவியையும், மகளையும் கொன்று விட்டு தப்பும்போது அவர் உடலிலும் தீப்பிடித்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது.

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story