கைலாய மானசரோவரில் உயிரிழந்த தலைமை ஆசிரியரின் உடல் இன்று அடக்கம் ஆண்டிப்பட்டியில் நடக்கிறது


கைலாய மானசரோவரில் உயிரிழந்த தலைமை ஆசிரியரின் உடல் இன்று அடக்கம் ஆண்டிப்பட்டியில் நடக்கிறது
x
தினத்தந்தி 6 July 2018 4:00 AM IST (Updated: 6 July 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

கைலாய மானசரோவரில் புனித யாத்திரைக்கு சென்ற போது மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரனின் உடல் இன்று ஆண்டிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் (வயது 69). இவருடைய மனைவி நாகரத்தினம் (67). இவர்கள் உள்பட அதே பகுதியை சேர்ந்த 6 பேர் திபெத்திய மலைப்பகுதியில் உள்ள கைலாய மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றனர். இவர்கள் நேபாளம் வழியாக கைலாய மலையை அடைந்தனர். அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக ராமச்சந்திரன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமச்சந்திரன் இறந்த தகவல் குறித்து அவருடைய மனைவி நாகரத்தினம், தனது மகன் வெங்கடேச நரசிம்மன், மகள் ஜெயஸ்ரீபத்மா ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் மானசரோவருக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராமச்சந்திரனின் உடல் நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ராமச்சந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மகன் வெங்கடேச நரசிம்மன், மகள் ஜெயஸ்ரீபத்மா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து ராமச்சந்திரனின் அண்ணன் மகன் ஜெயராமன் கூறியதாவது:-

காத்மாண்டில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் எனது சித்தப்பாவின் உடல் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து உடல் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படுகிறது. பின்னர் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாகவோ அல்லது ஆம்புலன்ஸ் மூலம் ஆண்டிப்பட்டிக்கு நேரடியாகவோ இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டுவரப்பட உள்ளது. எனது சித்தப்பாவின் உடலை ஆண்டிப்பட்டியில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சித்தப்பாவின் சொந்த ஊர் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள விடத்துக் குளம் ஆகும். அவரது உடல் ஆண்டிப்பட்டிக்கு கொண்டுவரப்பட உள்ளதால் உறவினர் கள் அனைவரும் இங்கு வந்திருக்கிறோம் என்றார்.

Next Story