நீலகிரியில் 31 ஆயிரத்து 879 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும்


நீலகிரியில் 31 ஆயிரத்து 879 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும்
x
தினத்தந்தி 5 July 2018 10:00 PM GMT (Updated: 5 July 2018 7:40 PM GMT)

நீலகிரியில் நடப்பாண்டில் விவசாயிகள் 31 ஆயிரத்து 879 பேருக்கு மண்வள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

ஊட்டி,

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

‘மண் வளத்தை காத்து உணவு தானிய உற்பத்தியை பெருக செய்ய வேண்டும்’ என்ற நோக்கத்தில் தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டைகளை வழங்கி வருகிறது. உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க செய்வதில் நீர்வளம், மண் வளம், மண்ணின் தன்மை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துகள் உள்பட 20 வகையான ஊட்டச் சத்துகள் தேவைப்படுகின்றன.

மேற்கண்ட சத்துகள் சரியான அளவில் இருந்தால் மட்டுமே, நல்ல மகசூல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு பயிருக்கான உரத்தேவையை கணக்கிடுவதற்கு மண்ணில் உள்ள சத்துகளின் அளவு விவரம் அறிந்து, மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகும். மண்வள அட்டை திட்டம் மூலம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் சுழற்சி முறையில் விவசாயிகளின் வயல்களில் கிரிட் முறையில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மண் ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்படுகிறது. 2018-2019-ம் ஆண்டு நிறைவில் மொத்தம் 67.67 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 31 வருவாய் கிராமங்களில் 3 ஆயிரத்து 867 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு மண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. அதன் பின்னர் 31 ஆயிரத்து 879 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ள உர சிபாரிசின் படி, பயிருக்கு தேவையான உரம் இடுவதால் உரச்செலவு குறைவதோடு, மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. சமச்சீரான உரம் இடுவதன் மூலம் மகசூல் கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

எனவே, வருங்காலங்களில் மண்வள அட்டையின் சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே, விவசாயிகள் உரங்களை விற்பனையாளர்களிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷின் (விற்பனை முனைய கருவி) மூலம் பெற திட்டமிடப்பட்டு உள்ளது. ஆகவே, விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை வைத்திருப்பதை போல, மண்வள அட்டையினையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீலகிரி விவசாயிகள் மண்வள அட்டை பெற்று, அதன் பயன்பாட்டினை அறிந்து மண்வள அட்டையின் அடிப்படையிலேயே உரமிட்டு, மண்வளத்தை காத்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story