டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை
காட்டு யானை தாக்கி 2 பேர் பலியான நிலையில், டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தைதமட்டம், காக்கப்பாளி, சுண்டவயல், பாலக்கொல்லி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தைதமட்டம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், எதிர்ப்பை மீறியும் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி தைத மட்டம், காக்கப்பாளி, சுண்டவயல், பாலக்கொல்லி, வட்டக்கொல்லி, ஒருமடம், முண்டக்கொல்லி, வாச்சிக்கொல்லி, பாடந்துறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள் பள்ளி செல்லா போராட்டத்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் டாஸ் மாக் மதுக்கடை அங்கிருந்து மாற்றப்படும் என்று உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அதன்படி, டாஸ்மாக் மதுக் கடை இடமாற்றம் செய்யப்பட வில்லை. அப்பகுதியை சுற்றி வனப்பகுதியும், தரிசு நிலங்களும் உள்ளன. மேலும் அங்கு மாலையில் காட்டு யானை நடமாட்டமும் இருக்கிறது. டாஸ்மாக் மதுக் கடையில் மது அருந்தி விட்டு வருபவர்கள் போதையில் சாலை மற்றும் வனப்பகுதியில் விழுந்து விடுகின்றனர். அவர்களை காட்டு யானை தாக்கும் அபாயம் உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் 10 நாட்களுக்குள் டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், அந்த 10 நாட்களுக்குள் வேறு இடத்துக்கு மாற்றப்பட வில்லை. எனவே, டாஸ்மாக் மதுக்கடையை அதிகாரிகள் அளித்த உறுதிப்படி அகற்ற ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story