அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும் சட்டசபையில் நாராயணசாமி தகவல்


அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும் சட்டசபையில் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 6 July 2018 3:30 AM IST (Updated: 6 July 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் ஜீரோ அவரில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

அன்பழகன்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசுக்கு அதிகாரமா? கவர்னருக்கு அதிகாரமா? என்பது குறித்து நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதில் முழுஅதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் உள்ளது. அரசின் நடவடிக்கைகளில் தேவையில்லாமல் கவர்னர் தலையிடக் கூடாது. தன்னிச்சையாக அவர் முடிவு எடுக்கக் கூடாது. எல்லா பிரச்சினைகளுக்கும் தேவையில்லாமல் மத்திய அரசுக்கு கோப்புகளை அனுப்பக் கூடாது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அ.தி.மு.க. வரவேற்கிறது. இத்தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு டெல்லி சம்பந்தமான தீர்ப்பாக இருந்தாலும், புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் இத்தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தவேண்டும். ஆனால் தீர்ப்பின் 180-வது பாராவில் டெல்லி யூனியன் பிரதேசம் 239-ஏ.ஏ. அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது. ஆனால் புதுச்சேரி 239-ஏ சட்டப்பிரிவிற்கு உட்பட்டது. எனவே இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நமக்கு பொருந்துமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இத்தீர்ப்பை பின்பற்றி நாமும் நம் மாநிலத்ததிற்கு உரிய நல்ல தீர்ப்பை பெற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.


லட்சுமிநாராயணன் (காங்): தீர்ப்பு தொடர்பாக சிலர் செய்யும் தேவையற்ற பிரசாரம் தீர்ப்பினை அவமதிப்பதுபோல் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது பாராளுமன்ற சட்டத்துக்கான அதிகாரத்தை பெற்றது. தீர்ப்பை விமர்சித்தால் கோர்ட்டு அவமதிப்பாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று அதில் தெளிவாக கூறியுள்ளது.

கவர்னர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சரவையின் ஆலோசனையை கேட்டுதான் செயல்பட முடியும். அதை புரிந்துகொள்ளாதவர்களுக்கு தனியாக கோச்சிங் கொடுக்கவேண்டும்.

அரசு கொறடா அனந்தராமன்: மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான ஆட்சிகள் நடக்கும் மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் மக்கள் அரசுக்கு தொந்தரவு கொடுத்ததால்தான் டெல்லியில் வழக்கிற்கு சென்றார்கள். அதுதொடர்பான தீர்ப்பில் கவர்னர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும் என்ற தெளிவாக கூறப்பட்டுள்ளது. அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னரிடம் ஆலோசனை கேட்கவேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

லட்சுமிநாராயணன்: புதுவை சம்பந்தமான வழக்கும் சென்னை ஐகோர்ட்டில் வருகிறது. அதில் புதுவை தொடர்பான தீர்ப்பும் வந்துவிடும்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளது. அதில் கவர்னர், அமைச்சரவையின் செயல்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கவர்னர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சரவையின் முடிவினை மாற்றவும் அதிகாரம் இல்லை. அதிகாரிகளை அழைத்து கூட்டம்போடும் அதிகாரமும் இல்லை என்று நான் தொடர்ந்து கூறி வந்தேன்.

கவர்னரின் செயல்பாடு தொடர்பாக முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடுத்தார். அப்போது சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி தொடர்பான வழக்கு இருப்பதால் அதன் தீர்ப்பு வந்ததும் வழக்கினை எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அந்த வழக்கும் விசாரணைக்கு வருகிறது.


இதற்கிடையில் சிலர் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று கூறுகிறார்கள். அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 239, 239-ஏ, 240 ஆகிய பிரிவுகள் புதுச்சேரிக்கு என உள்ளது. புதுவைக்கு தனி அதிகாரம் உள்ளது. இங்கு நிலம், நிர்வாகம், போலீஸ் ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியும் சிலர் தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்பி வருகிறார்கள். ஒரு சிலர் இல்லாத அதிகாரத்தை இருப்பதாக கூறுவதை சுப்ரீம் கோர்ட்டு பார்த்துக்கொள்ளும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story