தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்-பிரான்ஸ் உயர்கல்வி மையம் இடையே கல்வி-பண்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்-பிரான்ஸ் உயர்கல்வி மையம் இடையே கல்வி-பண்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 6 July 2018 4:15 AM IST (Updated: 6 July 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தமிழ்ப்பல் கலைக்கழகம்-பிரான்ஸ் பன்னாட்டு உயர்கல்வி மையம் இடையே கல்வி-பண்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்பயிற்சி வரை படிப்புகளை மேற்கொள்ள தமிழ் வளர் மையம் என்ற அமைப்பும், இசை மற்றும் நாட்டிய பயிற்சிகளை பட்டம், சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளாகப் பெறும் வகையில் தமிழ் பண்பாட்டு மையம் என்ற அமைப்பும் தமிழக அரசின் நிதி நல்கையுடன் ஏற்படுத்தப் பட்டன. அதற்காக பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள பன்னாட்டு உயர்கல்வி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்தது. பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரன், பிரான்ஸ் உயர்கல்வி மையத்தின் இயக்குனர் பேராசிரியர் சச்சிதானந்தன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதன்படி இனி பிரான்ஸ் நாட்டில் பட்டப்படிப்புகள், இசை, நாட்டிய பயிற்சிகளை தமிழ்ப்பல்கலைக்கழகம், தொலைகாண்காட்சி (வீடியோகான்பரன்சிங்) மூலமாகவும், நேரடியாகவும் வழங்கும். இதற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை பிரான்ஸ் நாட்டு உயர்கல்வி மையத்தின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் வழங்குவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர் பாஸ்கரன், பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்கள் ஆயத்தம் செய்யப்பட்டு வருவதாகவும், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டூடியோவில் இருந்து நேரடியாக தொலைகாண்காட்சி மற்றும் காணொலிப்பதிவு முறையிலும் வகுப்புகள் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்மைய ஒருங்கிணைப் பாளர்கள் மற்றும் தமிழ் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Next Story