சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மடியேந்தி நூதன போராட்டம்
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மடியேந்தி நூதன போராட்டம் நடத்தினர்.
கோவை,
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கருப்பு உடை அணிந்து கையில் தட்டுடன் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு வந்தனர். ஆனால் அவர்கள் தட்டுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தர்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதை தொடர்ந்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மடியேந்தி பிச்சை எடுப்பது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வீரபத்திரன் தலைமை தாங்கினார்.
மாநில துணை தலைவர் சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
தமிழ்நாடு ஓய்வூதிய சட்டம் அனுமதித்து உள்ள குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையான ரூ.7,850 வழங்கவேண்டும். அகவிலை படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர் இறந்தால் குடும்ப நல நிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மருத்துவபடி ரூ.300 மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் தட்டு வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்து இருந்தோம். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் மடியேந்தி பிச்சை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதன் மூலம் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் விரைவில் சென்னையில் பெரும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் சாரதா, ஆனந்தவள்ளி, பழனிசாமி, பரமசிவம், தமிழரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story