கலெக்டர் அலுவலகம் எதிரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் எதிரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2018 3:45 AM IST (Updated: 6 July 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

நேற்று 3-ம் நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், ஊராட்சி செயலாளர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.

இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். கணினி உதவியாளர்கள், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story