வருகை பதிவேட்டை பராமரிக்காததால் அங்கன்வாடி அமைப்பாளர் மீது நடவடிக்கை கலெக்டர் உத்தரவு


வருகை பதிவேட்டை பராமரிக்காததால் அங்கன்வாடி அமைப்பாளர் மீது நடவடிக்கை கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 6 July 2018 4:00 AM IST (Updated: 6 July 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே வருகை பதிவேட்டை பராமரிக்காததால் அங்கன்வாடி அமைப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

ஓமலூர்,

ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வு நடத்தினார். அவர் பாகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமனூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு இல்லாமல் திறந்து இருந்த தண்ணீர் தொட்டியை மூட கூறினார்.

பின்னர் பாகல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற கலெக்டர் ரோகிணி, அங்கு காலி இடத்தில் இருந்த பார்த்தீனியம் செடிகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுகாதார நிலைய வளாகத்தில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் கிடந்த பிளாஸ்டிக், பேப்பர் டம்ளர்களை அகற்ற அறிவுரை வழங்கினார்.

ஓமலூர் அருகே உள்ள பத்தினம்பட்டி கார்த்திக்காடு முதல் ராமகுட்டை வரை 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சாலையை பார்வையிட்டார். தொடர்ந்து முத்துநாயக்கன்பட்டி ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு கலெக்டர் ரோகிணி திடீரென்று சென்று ஆய்வு நடத்தினார். அங்கு 5 குழந்தைகள் மட்டும் இருந்தனர்.

தொடர்ந்து அங்குள்ள வருகை பதிவேடு மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி, எடை குறித்த கண்காணிப்பு பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து அங்கன்வாடி அமைப்பாளர் கலைச்செல்வி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரோகிணி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் பிறகு பத்தினம்பட்டி ஊராட்சி மூங்கினேரி பகுதியில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிட்டார். அங்கு முறையாக கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மேட்டூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராமதுரை முருகன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story