காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது
குடியாத்தத்தில் கல்லூரிக்குள் புகுந்து காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
குடியாத்தம்,
மாதனூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் பிரசாந்த் (வயது 23), ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
மாதனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் குடியாத்தத்தில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரசாந்த் மாதனூர் வழியாக குடியாத்தம் கல்லூரிக்கு வந்துசென்ற மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். அவர் அடிக்கடி மாணவியை பின்தொடர்ந்து வந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாணவி வழக்கம்போல் கிராமத்தில் இருந்து பஸ் மூலம் குடியாத்தத்திற்கு வந்தபின்னர் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்றார்.
அப்போது மாணவியை பிரசாந்த் பின்தொடர்ந்து வந்துள்ளார். மாணவி காலை 8.30 மணியளவில் கல்லூரிக்கு சென்று வகுப்பறையில் இருந்தார். வகுப்பறையில் தனியாக இருந்த மாணவியிடம் பிரசாந்த் சென்று தன்னை காதலிக்க வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் போன் எண் கேட்டு மாணவியின் செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார். மாணவி தடுத்தபோது அவரை வகுப்பறையில் வைத்து செல்போனால் தலை மற்றும் முகத்தில் தாக்கிவிட்டு செல்போனை பறித்து கொண்டு வெளியே சென்றார். மாணவியும் வாலிபர் பிரசாந்திடம் இருந்து செல்போனை மீட்க பின்னால் சென்றார். கல்லூரிக்கு வெளியே மாணவி செல்போனை மீட்க முயற்சித்தபோது அவரை பிரசாந்த் தாக்கிவிட்டு, காதலிக்க வற்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்போது பொதுமக்கள் ஒன்று கூடவே பிரசாந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பொதுமக்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story