பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே நான்குவழிச்சாலை செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்குகிறது
பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே ரூ.2 ஆயிரம் கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.
உடுமலை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல்வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக உடுமலை தாலுகாவில் அந்தியூர், பூலாங்கிணர், கணபதிபாளையம், உடுமலை, புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை, ராகல்பாவி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களும், மடத்துக்குளம் தாலுகாவில் மைவாடி, ஏ.கே.புத்தூர், எஸ்.கே.புத்தூர், வேடபட்டி, சோழமாதேவி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக உடுமலையில் நில அளவை பணிகள் நிறைவடைந்து எந்தெந்த பகுதியில் எவ்வளவு அகலம் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது என்கிற வரைபடம் தயாரிக்கும் பணிநடந்து வருகிறது. இந்த நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் தொடர்பாக மேற்கொண்டு என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ள பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. எனவே எத்தனை மரங்கள் உள்ளன என்று சரியாக கணக்கெடுக்கப்படவேண்டும். கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் மதிப்பும், அதன் அருகில் உள்ள நிலத்தின் மதிப்பும் ஒப்பிட்டு இழப்பீடு தொகை விவசாயிகள் மகிழ்ச்சிக்கு உரிய வகையில் இருக்க வேண்டும்.
குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும்போது பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு வந்து விடக்கூடாது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான கட்டிடங்கள் ஆகியவை குறித்து அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். மின்கம்பங்களை மாற்றி அமைப்பது, குடிநீர் குழாய்களை மாற்றி அமைப்பது உள்ளிட்ட பணிகள் அடுத்த வாரம் தொடங்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திட்டம் வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு-திண்டுக்கல்) லதா முன்னிலை வகித்தார். நில எடுப்பு தாசில்தார் முத்துராமன் வரவேற்றார். ஆர்.டி.ஓ.அசோகன், தாசில்தார் தங்கவேல் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனர் முத்துடையார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே 160 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைய உள்ளது. இந்த சாலையின் அகலம் 60 மீட்டர். இதில் மடத்துக்குளம் ஊராட்சி பகுதிகளில் அமராவதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே இந்த நான்கு வழிச்சாலைக்காக சுமார் ஆயிரம் ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இழப்பீடு தொகை நில மதிப்பிற்கு ஒரு மடங்கு கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. இழப்பீடு தொகை வழங்குவதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை திட்டத்தின் ரூ.2 ஆயிரம்கோடியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் உடுமலையை பொறுத்தவரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவு படுத்தப்பட உள்ளது. அத்துடன் புறவழிச்சாலையாக புதியதாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ராகல்பாவி பிரிவு மற்றும் பாலப்பம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து, புதியதாக அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலைக்கு அதே அகலத்தில் இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது.
தற்போது பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு 3½ மணிநேரம் ஆகிறது. புதியதாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டால் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு 1½ மணிநேரம் மட்டுமே ஆகும். இந்த நான்கு வழிச்சாலை திட்டம் கட்டுமான பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story