நவிமும்பை நில முறைகேடு புகார்: சட்டசபையில் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் மறுப்பு பதவி விலக தேவையில்லை என்றும் பதில்
நவிமும்பை நில முைறகேடு புகாரில் காங்கிரஸ் குற்றச்சாட்டை சட்டசபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்தார்.
நாக்பூர்,
நவிமும்பை நில முைறகேடு புகாரில் காங்கிரஸ் குற்றச்சாட்டை சட்டசபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்தார். தான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் பதிலளித்தார்.
நில முறைகேடு புகார்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், சஞ்சய் நிருபம் உள்ளிட்ட தலைவர்கள் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர். அந்த சந்திப்பில் கொய்னா அணை திட்டத்தின்போது அப்புறப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றம்சாட்டினர். நவிமும்பை பகுதியில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,767 கோடி மதிப்புடைய 24 ஏக்கர் நிலம் வெறும் ரூ.3 கோடியே 60 லட்சத்துக்கு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விற்கப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
முதல்-மந்திரி பட்னாவிசுக்கு நெருக்கமான பா.ஜனதா எம்.எல்.சி. பிரசாத் லாட் என்பவர் சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூட்டாளியாக இருப்பதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சியினர், நகர்புற தொழில் மேம்பாட்டு கழகத்தை(சிட்கோ) தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்-மந்திரி பட்னாவிசின் ஆசீர்வாதம் இல்லாமல் இந்த முறைகேடு நடைபெற்று இருக்க வாய்ப்பு இல்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.
முதல்-மந்திரி பதவி விலக வலியுறுத்தல்
இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல்-மந்திரி பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, முதல்-மந்திரி பட்னாவிஸ் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கும்படி கேட்டுக்கொண்டது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக நாக்பூரில் மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு முதல்-மந்திரி மீதான முறைகேடு குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் கேள்வி நேரத்தை ரத்து செய்ய சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் சபையில் அமளி உண்டானது.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்த முதல்-மந்திரி பட்னாவிஸ் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில்...
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போதுதான் அரசு திட்டங்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு முதல் தர விவசாய நிலம் ஒதுக்கீடு செய்ய கூடுதல் கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலங்களை அதன் உரிமையாளர்கள் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஆட்சியில் கொய்னா அணை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 606 ஹெக்டர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிலம் ஒதுக்கப்பட்ட அதே நாளிலேயே சுமார் 200 விவசாயிகள் தங்களது நிலத்தை விற்பனை செய்துவிட்டனர்.
இதேபோல தற்போது 8 விவசாயிகளிடம் இருந்து சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனம் இந்த விளைநிலங்களை வாங்கியுள்ளது.
ராஜினாமா இல்லை
ஆனால் 200 விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட 606 ஹெக்டர்கள் குறித்த கோப்புகள் உங்களிடம் (பிரிதிவிராஜ் சவான்) வரவில்லையா? அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை விற்பனை செய்ததற்கு நீங்கள்தான்(பிரிதிவிராஜ் சவான்) பொறுப்பாளி என அர்த்தமாகாதா?.
கண்ணாடி வீட்டுக்குள் வசித்து வருபவர்கள் பிறர் மீது கல்லெறியக்கூடாது. நான் கண்ணாடி வீட்டுக்குள் வசிக்கவில்லை. எனது ராஜினாமா குறித்த கேள்விக்கே இடமில்லை. அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி கூறினார்.
நாள் முழுவதும் ஒத்திவைப்பு
ஆனால் முதல்-மந்திரி பட்னாவிசின் பதிலால் திருப்தியடையாத எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே முதல்-மந்திரி பட்னாவிஸ் மீது அபாண் டமாக குற்றம்சாட்டியதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மன்னிப்பு கேட்குமாறு பா.ஜனதா உறுப்பினர் ராம் கதம் வலியுறுத்தினார். தொடர்ந்து இரு தரப்பினரும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் ஹரிபாவ் பக்தே சபை நடவடிக்கைகளை 4 முறை தள்ளி வைத்தார்.
ஆனால் அவை அமைதிக்கு திரும்பாததால் நாள் முழுவதும் அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story