‘8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கையாள்கிறது’ தமிழக அரசு மீது திருநாவுக்கரசர் தாக்கு


‘8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கையாள்கிறது’ தமிழக அரசு மீது திருநாவுக்கரசர் தாக்கு
x
தினத்தந்தி 5 July 2018 10:25 PM GMT (Updated: 5 July 2018 10:25 PM GMT)

தூத்துக்குடியில் நடந்ததை போல, 8 வழிச்சாலைக்கு எதிராக போராடும் மக்கள் மீது போலீசார் மூலம் தமிழக அரசு அடக்குமுறையை கையாள்கிறது என்று, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல்,

திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது நிருபர்களுக்கு அவர் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சேலம்-சென்னை வரை அமைக்கப்பட உள்ள 8 வழிச்சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடியபோது, அதனை அரசு காவல்துறை மூலம் அடக்க முயன்றது. இதனால்தான் 13 பேர் பலியானார்கள். அதுபோன்ற ஒரு அடக்குமுறையைத்தான், 8 வழிச்சாலைக்கு எதிராக போராடும் மக்கள் மீது தமிழக அரசு கையாள்கிறது. தூத்துக்குடியில் நடந்தது போன்ற சம்பவம், 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்களுக்கு நடக்கக்கூடாது.

இதனால் அரசு, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கி சமாதானம் செய்த பின்னர் தான் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும். கவர்னருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டு, முதல்-அமைச்சருக்கு எதிராக போராடினால் 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆட்சியில் இருக்கும் அரசு தவறு செய்தால் அதற்கு எதிராக மக்களும், எதிர்க்கட்சிகளும் தான் குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் மீது அடக்குமுறையை கையாள்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது.


கவர்னரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு டெல்லிக்கு மட்டும் அல்ல தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். அந்த தீர்ப்பை முன்உதாரணமாக வைத்து அனைத்து மாநில கவர்னர் கள், துணை நிலை கவர்னர்கள் செயல்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை தமிழக அரசு பெற வேண்டும். ஆனால், இது தங்களுடைய மாநில பிரச்சினை என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறி வருகிறார். இது ஒரு மாநில பிரச்சினை கிடையாது. இதனால் தமிழக முதல்-அமைச்சர், காவிரி மேலாண்மை ஆணைய குழு உறுப்பினர்கள் மூலமும், மத்திய அரசு மூலமும் அழுத்தம் கொடுத்து போராடி தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை முழுமையாக பெற்றுத்தர வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை கேட்டும், ஆலையை மீண்டும் திறக்க கோரியும், ஆலை நிர்வாகம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழ்நிலையிலும் திறக்கக்கூடாது. அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story