விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கண்டக்டர் இல்லாத புதிய அரசு பஸ்கள் இயக்கம்


விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கண்டக்டர் இல்லாத புதிய அரசு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 6 July 2018 4:28 AM IST (Updated: 6 July 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கண்டக்டர் இல்லாமல் புதிய அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம்,

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் 7 கோட்டங்கள், 21 மண்டலங்கள் மூலம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியதாக நவீன குளிர்சாதன வசதி கொண்ட பஸ், தூங்கும் வசதி மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் கொண்ட பஸ்கள் வாங்கப்பட்டன. இந்த பஸ்கள் அனைத்து கோட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கண்டக்டர் இல்லாமல் 500 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நீலம் மற்றும் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட புதிய பஸ்கள் அரசு சார்பில் வாங்கப்பட்டு அந்தந்த கோட்டங்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் விழுப்புரம் கோட்டத்திற்கு 60 பஸ்கள் வழங்கப்பட்டது. இந்த பஸ்களில் பாதுகாப்பு வசதியுடன் 44 தனித்தனி குஷன் இருக்கைகள், பாதுகாப்பான கண்ணாடி கதவுகள், இரு அவசரகால வழிகள், சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளது. மேலும் பயணிகளிடம் தகவல் பரிமாற்றம் மற்றும் எச்சரிக்கை செய்வதற்கு வசதியாக டிரைவர் இருக்கையின் அருகே ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதோடு பஸ்சில் தடம் எண், ஊர்களை குறிப்பிடுவதற்காக மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பஸ்கள் விழுப்புரம் கோட்டம் சார்பில் நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மண்டலத்திற்கு 15 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கும் ஒரு நாளைக்கு 8 பஸ்கள் வீதம் 16 முறை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கான டிக்கெட்டை விழுப்புரம் மற்றும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பஸ்கள் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு பெருங்களத்தூரில்தான் நிற்கும். பின்னர் அங்கிருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு செல்லும். இடையில் எங்கும் நிற்காது. இதனால் மற்ற பஸ்களை காட்டிலும் சுமார் 1 மணி நேரம் வரை பயண நேரம் குறைவதால் பயணிகள் மத்தியில் இந்த பஸ்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும் இந்த வகை பஸ்கள் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்த விழுப்புரத்திற்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் பயண கட்டணம் ரூ.150 ஆகும். விழுப்புரத்தில் இருந்து காலை 5 மணிக்கு முதல் பஸ்சும், இரவு 10 மணிக்கு கடைசி பஸ்சும் இயக்கப்படுகிறது. தற்போது ஒரு நாளைக்கு 16 முறை இரு மார்க்கத்திலும் இருந்து இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதல் முறை இயக்கப்படும் என்றனர்.

Next Story