கடலூர் நகராட்சிக்கு வாடகை செலுத்தாததால் 10 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு


கடலூர் நகராட்சிக்கு வாடகை செலுத்தாததால் 10 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 6 July 2018 4:56 AM IST (Updated: 6 July 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் நகராட்சிக்கு வாடகை செலுத்தாததால் 10 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து ஆணையாளர் சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகரில் நகராட்சிக்கு சொந்தமான 250 கடைகள் உள்ளன. இதில் கடந்த 3 ஆண்டுகளாக 108 கடைக்காரர்கள் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர். இதனால் வாடகை பணம் ரூ.27 லட்சம் வசூல் செய்யாமல் இருந்தது. இவர்களுக்கு வாடகை செலுத்துமாறு பல முறை நகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியும் கடை உரிமையாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் சரவணன், வருவாய் அதிகாரி சுகந்தி, அலுவலர்கள் அருள், தங்கமணி, நகரமைப்பு அலுவலர் தயாநிதி, வருவாய் ஆய்வாளர் சண்முகம், துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பதற்காக சென்றனர்.

இதை அறிந்ததும் சில கடைக்காரர்கள் வாடகையை செலுத்தி, ரசீது பெற்றனர். ஆனால் 10 கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்த முன்வரவில்லை. இதையடுத்து அந்த 10 கடைகளையும் நகராட்சி ஆணையாளர் சரவணன் முன்னிலையில் ஊழியர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இருப்பினும் நேற்று ஒரே நாளில் வாடகை ரூ.12 லட்சம் வசூல் ஆனது. இதேபோல் நகராட்சி முழுவதும் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று ஆணையாளர் சரவணன் தெரிவித்தார்.

Next Story