அரூரில் 8 வழி பசுமைச்சாலை திட்ட அரசாணை நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 27 பேர் கைது


அரூரில் 8 வழி பசுமைச்சாலை திட்ட அரசாணை நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 27 பேர் கைது
x
தினத்தந்தி 6 July 2018 10:45 PM GMT (Updated: 6 July 2018 6:03 PM GMT)

அரூரில் 8 வழி பசுமைச்சாலை திட்ட அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.


அரூர்,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக தர்மபுரி மாவட்டத்தில் 53 கிலோமீட்டர் வரை சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு தர்மபுரி மாவட்டத்தில் 919.24 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தப்பட உள்ளது.

இதனால் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் வீடுகள், விவசாய நிலங்கள், தென்னை மரங்கள், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அளவீடு செய்யும் பணி நடைபெற்று முடிவடைந்தது. நிலங்கள் அளவீடு செய்யவும், தனிநபர் நிலங்கள் ஆய்வு செய்யவும், விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றனர். மேலும் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.


இந்தநிலையில் பொது மக்களை பாதிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று அரூரில் திட்ட அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாநில துணை தலைவர் முகமதுஅலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மல்லையன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோவிந்தன், ஏழுமலை, நேரு, தீர்த்தகிரி ஆகியோர் கலந்து கொண்டு 8 வழி பசுமைச்சாலையை வேறு வழியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன், வட்ட செயலாளர்கள் மல்லிகா, வஞ்சி, மாவட்டகுழு உறுப்பினர்கள் சேகர், சின்னராசு உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது திட்ட அரசாணை நகலை எரிக்க முயன்ற 27 பேரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story