கிருஷ்ணகிரியில் கூட்டுறவு நியாய விலைக்கடை தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு, தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநில துணைப் பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் வரவேற்றார். சீனிவாசப்பா, மாதேஷ், பாலு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பேரவை செயலாளர் கிருஷ்ணன், கவுன்சில் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் பொது வினியோக திட்டத்தை சீர்குலைப்பதை கைவிட்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாக்க வேண்டும். குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ள மின்னணு அட்டைகளில் உள்ள குறைபாடுகளை முழுமையாக களைந்திட வேண்டும். கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின்படி நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்கிட வேண்டும். பொது வினியோக திட்டத்தை ஒரு துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானிய நிலுவை ரூ.1,116 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். கூட்டுறவு நியாயவிலைக்கடை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, பராமரிப்பு உறுதி செய்திட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ.3 லட்சமாக உயர்த்திட வேண்டும். ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பை உறுதி படுத்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். பணிவரன் முறை செய்யப்படாத ஊழியர்கள் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்திட வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில், கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story