நாமக்கல்லில் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


நாமக்கல்லில் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 July 2018 4:00 AM IST (Updated: 7 July 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில், சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் வகுரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சி ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகில் நேதாஜி நகர் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் சரியான சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் திருச்சி ரோடு வழியாக சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீரை வெளியேற்றி வந்தனர்.

அந்த சாக்கடை கால்வாய் வழியாக திருச்சி ரோட்டில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களின் கழிவுநீரும் சென்று வந்தது. இந்த நிலையில் கழிவுநீர் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் செல்லும் நிலை உருவாகி உள்ளது.


இதன் காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல்லில், திருச்சி ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வகுரம்பட்டி ஊராட்சியில் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவுநீர் சாலையில் தேங்குவது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார், போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல் சாலையில் இருந்து கலைந்து செல்லுமாறு மறியலில் ஈடுபட்டவர்களை அறிவுறுத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சாலையில் இருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக நாமக்கல், திருச்சி சாலையில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story