சேலத்தில் இருந்து கோவை, மதுரை உள்பட வெளியூர்களுக்கு நவீன பஸ்கள் இயக்கம் கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சேலத்தில் இருந்து கோவை, மதுரை உள்பட வெளியூர்களுக்கு நவீன பஸ்கள் இயக்கத்தை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேலம்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் நவீன புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டத்திற்கு 78 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் சேலத்துக்கு 45 பஸ்களும், தர்மபுரிக்கு 33 பஸ்களும் அடங்கும்.
இந்த பஸ்களில் விசாலமான இருக்கை வசதிகளுடன் கூடிய 52 இருக்கைகள் உள்ளன. அவசர நேரத்தில் பயணிகள் உடனடியாக வெளியேற பக்கவாட்டில் 2 அவசர வழி கதவுகள், தீயணைப்பு கருவி, ஒவ்வொரு நிறுத்தமும் வந்தவுடன் டிரைவர் மைக் மூலம் பயணிகளுக்கு அறிவுறுத்துதல், டிரைவருக்கு மின்விசிறி வசதி, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நவீன பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பூர், மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்கிறது. நவீன பஸ்கள் இயக்க தொடக்க விழா நேற்று சேலம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெற்றது. வழித்தடங்களில் புதிய பஸ்களை எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, வெற்றிவேல், சின்னதம்பி, மருதமுத்து, அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் அரவிந்த், சேலம் கோட்ட மேலாளர் சந்திரமோகன், துணை மேலாளர்கள் ஜீவரத்தினம், சின்னசாமி, அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிந்தவுடன் கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் கோட்டத்தில் இருந்து இன்று(நேற்று) முதல் 78 நவீன புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் சேலத்தில் இருந்து 45 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சாயப்பட்டறைகளில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது கழிவுநீரை சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றும் மற்றும் அனுமதி பெறாமல் இயக்கப்படும் சாயப்பட்டறைகளை இடித்து அகற்றி வருகின்றனர்.
இதுவரை சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இனிமேல் சாயப்பட்டறை அமைக்க வாடகைக்கு நிலம் கொடுக்கும் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கொசுப்புழு உற்பத்தியாகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பழைய டயர்களை அப்புறுத்தப்படும் பணியும் நடைபெற்று வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story