அரசு வழங்கும் இழப்பீடு எங்களுக்கு வேண்டாம்: பசுமை சாலைக்காக நிலத்தை கொடுக்க முடியாது கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் மனு


அரசு வழங்கும் இழப்பீடு எங்களுக்கு வேண்டாம்: பசுமை சாலைக்காக நிலத்தை கொடுக்க முடியாது கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 6 July 2018 10:15 PM GMT (Updated: 6 July 2018 9:06 PM GMT)

அரசு வழங்கும் இழப்பீடு எங்களுக்கு வேண்டாம் என்றும், பசுமை சாலைக்காக நிலத்தை கொடுக்க முடியாது என்றும் அயோத்தியாப்பட்டணத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நில அளவீடு பணி நடந்தது. தொடர்ந்து எல்லைக்கற்கள் நடப்பட்டன. தற்போது எல்லைக்கற்கள் நடப்பட்ட இடங்களில் உள்ள கிணறுகள், மரங்கள், விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்கள் மற்றும் வீடுகள் உள்பட அனைத்தையும் அரசு துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.


கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு ஏற்கனவே தபால் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு தனித்தனியாக விவசாயிகளை சந்தித்து குறைகள் மற்றும் கருத்துகளை கேட்டனர். இதில் குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நில உரிமையாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்ந்து கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த ஆண், பெண் விவசாயிகள் அனைவரும் கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் எங்களை வாழ விடுங்கள், 8 வழி பசுமை சாலை எங்களுக்கு வேண்டாம் என்று எழுதிய பதாகைகளையும் கைகளில் வைத்திருந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கைகளில் மனுக்களை வைத்திருந்தனர்.

அந்த மனுக்களில், நாங்கள் அனைவரும் இந்த நிலத்தை வைத்து தான் வாழ்ந்து வருகிறோம். எங்களுடைய கருத்துகளை கேட்காமலேயே நிலத்தில் எல்லைக்கற்கள் நடப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இந்த நிலங்கள் எங்களுடைய வாழ்வாதாரமாக உள்ளதால், அதனை பசுமை வழி சாலைக்காக கொடுக்க முடியாது. மேலும் அரசு வழங்கும் இழப்பீடு எங்களுக்கு வேண்டாம். பசுமை வழி சாலை திட்டத்தை கைவிட்டு சேலம்-உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் சாலையை அகலப்படுத்தி மாற்று வழி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

சுமார் 2 மணி நேரம் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சேலம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட இடத்துக்கு வந்து, அவர்களை சமாதானம் செய்தார். தொடர்ந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் விவசாயிகள் தனித்தனியாக அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.


நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய கருத்து கேட்பு கூட்டம் மாலை 3.30 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 169 விவசாயிகளில் 100 பேர் கலந்து கொண்டனர். இதில் நில எடுப்பு பிரிவு தாசில்தார் அன்புக்கரசி, வாழப்பாடி தாசில்தார் பொன்னுசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி அந்த பகுதியில் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூர்யமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, இந்த கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பு நாடகம். இதற்கு முன்பு நடந்த கருத்து கேட்பு கூட்டம் தொடர்பாக எங்களுக்கு எந்தவித தகவலும் தரவில்லை. 8 வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம். எங்களது நிலம் தான் வேண்டும். நிலத்தை பறிகொடுத்தால் நாங்கள் அகதிகளாகத்தான் நிற்க வேண்டும் என்றனர்.

Next Story