ஓமலூர் திருமண மண்டபத்தில் நாளை விவசாயிகளிடம் கருத்து கேட்க முடிவு த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்


ஓமலூர் திருமண மண்டபத்தில் நாளை விவசாயிகளிடம் கருத்து கேட்க முடிவு த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 7 July 2018 4:30 AM IST (Updated: 7 July 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலைக்கு எதிராக த.மா.கா. சார்பில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதால், ஓமலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை விவசாயிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.


ஓமலூர்,

ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் சேலம் 8 வழி பசுமை சாலை ஆகியவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்க பொதுக்கூட்டம் பொட்டியபுரம் ஊராட்சி சட்டூர் மாரியம்மன் கோவில் திடலில், நடத்த த.மா.கா. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் த.மா.கா. மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து த.மா.கா. சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு, ஓமலூர் கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் உள் அரங்கு கருத்து கேட்பு கூட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கருத்து கேட்கிறார். இது தொடர்பாக மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் நேற்று ஓமலூரில் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


விமான நிலைய விரிவாக்கம், 8 வழி பசுமை சாலை ஆகிய திட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டங்களை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி த.மா.கா. சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நாளை ஓமலூர் கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் உள் அரங்கு கூட்டமாக நடைபெற உள்ளது.

இதில் விமான நிலையம் விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், 8 வழி பசுமை சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆகியோரை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சந்திக்கிறார். இதில் விவசாயிகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். தொடர்ந்து த.மா.கா.வின் நிலைபாட்டை அவர் அறிவிக்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story