நாகர்கோவிலில் பயங்கரம் மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; மாமியார்-அண்ணி மீதும் தாக்குதல் வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளி தற்கொலை முயற்சி


நாகர்கோவிலில் பயங்கரம் மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; மாமியார்-அண்ணி மீதும் தாக்குதல் வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 7 July 2018 4:15 AM IST (Updated: 7 July 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

நடத்தை சந்தேகத்தில் மனைவியை அரிவாளால் வெட்டி, தடுக்க வந்த மாமியார், அண்ணி மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய தொழிலாளி திடீரென தற்கொலைக்கு முயன்றார்.

நாகர்கோவில்,

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


நாகர்கோவில் குருசடியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 41), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜான்சி ராணி (36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அந்தோணிக்கும், ஜான்சிராணிக்கும் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்தோணியும், அவருடைய மனைவி ஜான்சிராணியும் குழந்தைகளுடன் ராமன்புதூர் சந்தியாகப்பர் குருசடி அருகே உள்ள ஜான்சிராணியின் அக்காள் செரின் விஜிலா என்பவர் வீட்டுக்கு சென்று தங்கினர். செரின் விஜிலா வீட்டில் அவருடைய தாயார் தைநேசியும் தங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று காலை அந்தோணிக்கும், ஜான்சிராணிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. உறவினர்கள் எவ்வளவோ முயற்சித்தும் கணவன்-மனைவியை சமாதானம் செய்ய முடியவில்லை. வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணி திடீரென வீட்டின் சமையல் அறைக்கு வேகமாக சென்றார்.

பின்னர் அங்கிருந்து ஒரு அரிவாளை எடுத்து வந்து தன் மனைவி ஜான்சிராணியை சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் ஜான்சிராணிக்கு 6 இடங்களில் பலத்த வெட்டு காயம் விழுந்து உடலில் இருந்து ரத்தம் வடிந்தோடியது. வலியால் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அவருடைய சகோதரி செரின் விஜிலா ஓடி வந்தார். ரத்த வெள்ளத்தில் தரையில் மயங்கி கிடந்த ஜான்சிராணியை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே ஜான்சிராணியின் தாயார் தைநேசியும் அங்கு வந்து தன் மகளின் நிலையை கண்டு துடிதுடித்து போனார் எனினும் ஆத்திரம் அடங்காத அந்தோணி சிறிதும் இரக்கம் பார்க்காமல் தான் வைத்திருந்த அரிவாளால் மீண்டும் ஜான்சிராணியை வெட்ட முயன்றார்.

அப்போது செரின் விஜிலாவும், தைநேசியும் ஒன்றாக சேர்ந்து அவரை தடுத்தனர். ஆனால் அந்தோணி இருவரையும் அரிவாளால் வெட்டினார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அக்கம் பக்கத்தினரை பார்த்ததும் அந்தோணி திடீரென அரிவாளால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு உடனடியாக இச்சம்பவம் பற்றி நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஜான்சிராணி உள்ளிட்ட 3 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஜான்சிராணியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கழுத்தை அறுத்துக்கொண்ட அந்தோணிக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டு இருந்தது. இதனால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்ததும், தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

ஜான்சிராணியின் நடத்தையில் அவருடைய கணவர் அந்தோணிக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி, தடுக்க வந்த மாமியார், அண்ணி மீதும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story