ரேஷன் கடையில் 850 கிலோ அரிசி இருப்பு குறைவு கண்டுபிடிப்பு ஊழியர் மீது போலீசில் புகார்


ரேஷன் கடையில் 850 கிலோ அரிசி இருப்பு குறைவு கண்டுபிடிப்பு ஊழியர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 6 July 2018 9:54 PM GMT (Updated: 6 July 2018 9:54 PM GMT)

களியக்காவிளை அருகே ரேஷன் கடையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 850 கிலோ அரிசி குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊழியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

களியக்காவிளை,

இதுகுறித்த விவரம் வருமாறு:-

களியக்காவிளை அருகே ஒற்றாமரத்தில் ஒரு ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் வழங்கப்படும் பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

இதையடுத்து நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சிவகுமரன் மற்றும் அதிகாரிகள் ஒற்றாமரத்தில் உள்ள ரேஷன் கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

கடையில் இருந்த பில் புக், இருப்பு நிலை அறிக்கை போன்றவற்றை ஆய்வு செய்தனர். அத்துடன், இருப்பு இருந்த அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை எடை போட்டு ஆய்வு செய்தனர்.


அப்போது, 850 கிலோ அரிசி குறைவாக இருப்பு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கடை ஊழியரிடம் விசாரித்த போது அவர் சரியாக பதில் கூறவில்லை. இதையடுத்து கடை ஊழியர் பரமசிவன் மீது அதிகாரிகள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story