மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் + "||" + Remove the occupations in the waters

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், 

மதுரை ஐகோர்ட்டு தென்மாவட்டங்கள் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே நீடிக்கிறது.

மாவட்டத்தை பொறுத்தமட்டில் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாட்களின் போது கிராம மக்களால் தொடர்ந்து புகார் தரப்படுகிறது. விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கண்மாயில் கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரால் தொடர்ந்து புகார் மனு தரப்பட்டு வருகிறது. இதே போன்று அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அந்தபகுதியை சேர்ந்தவர்களால் புகார் மனு தரப்பட்டுள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தின் போதும் கண்மாய், வரத்துக்கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விளை நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. நீர்நிலைகளில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாததால் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சில கிராமங்களில் இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம், மாவட்ட முழுவதும் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் யூனியன் அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவ்வபோது ஆய்வு செய்வதுடன் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.