அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள்
அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக சிவகங்கை தொகுதியில் பயன்படுத்த புதிய வாக்கு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
சிவகங்கை,
அடுத்த ஆண்டு (2019) இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தற்போது விரைவாக செய்து வருகிறது. இதில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கையின் போது புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), சிவகங்கை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தலின் போது பயன்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 310 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,800 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தேர்தல் பொறுப்பு அலுவலர் கண்ணபிரான், தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் மற்றும் பறக்கம் படை தாசில்தார் பாலகுரு ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருவில் இருந்து சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் அதிகாரிகள் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்தனர். வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story