ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியர் மனைவியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
ஈரோட்டில் பட்டப்பகலில் ஆசிரியர் மனைவியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு, ஈரோடு கொல்லம்பாளையம் நாடார் மேடு ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷியாமளா தேவி (வயது 44). இவர்கள் தங்களுடைய வீட்டின் முன்பு தோட்டம் அமைத்து பூச்செடிகள் வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ஷியாமளா தேவி வீட்டின் முன்பு உள்ள தோட்டதுக்கு சென்று பூச்செடிகளில் பூக்கள் ஏதேனும் பூத்து உள்ளதா? என்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென்று ஷியாமளா தேவியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திரும்பி பார்த்து ‘திருடன், திருடன்’ என சத்தம் போட்டார். உடனே அவர்கள் 2 பேரும் ஷியாமளா தேவியை கீழே தள்ளிவிட்டு, தாங்கள் வந்த மோட்டார்சைக்கிளில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். கீழே விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஷியாமளா தேவி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச்சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். |