தூத்துக்குடி அருகே, தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: முந்திரிகொட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது
தூத்துக்குடி அருகே முந்திரி கொட்டைகள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே முந்திரி கொட்டைகள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. அப்போது திடீரென தீப்பிடித்ததால் லாரி மற்றும் அதில் இருந்த முந்திரி கொட்டைகள் எரிந்து நாசமானது.
முந்திரி கொட்டைகள் ஏற்றிய லாரி
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி, முந்திரி கொட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலையில் நெல்லைக்கு புறப்பட்டது. அந்த லாரியை, நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 44) என்பவர் ஓட்டிச் சென்றார்.
தூத்துக்குடி-நெல்லை பைபாஸ் ரோட்டில் வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவரில் லாரி மோதி, சாலையில் கவிழ்ந்தது. அப்போது திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் வெற்றிவேல் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
தீயை போராடி அணைத்தனர்
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரி மற்றும் முந்திரி கொட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story