கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடந்தது


கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடந்தது
x
தினத்தந்தி 7 July 2018 2:30 AM IST (Updated: 7 July 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் பெங்களூரு விதான சவுதா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெங்களூரு,

கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் பெங்களூரு விதான சவுதா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கர்நாடக பட்ஜெட்டை முதல்–மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் மண்டியா, ஹாசன், ராமநகர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில் தங்களின் மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் விதான சவுதா வளாகத்தில் நேற்று குமாரசாமியை கண்டித்து கருப்பு துணியை தோள் மீது போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்கள் தங்களின் கைகளில் மாநில அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் அவர்கள் மாநில அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். பட்ஜெட்டில் கடலோர மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், தங்களின் பகுதிக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

குமாரசாமி புறக்கணித்துவிட்டார்

இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த சுனில்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், “பட்ஜெட்டில் மண்டியா, ஹாசன், ராமநகர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ஆனால் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களை குமாரசாமி புறக்கணித்துவிட்டார். தேர்தல் தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் அந்த மாவட்ட மக்களை பழிவாங்கும் விதமாக இந்த கூட்டணி அரசு நிதி ஒதுக்கவில்லை“ என்றார்.


Next Story